சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும், அதன் அருகில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், இதன் அருகே அரசு மதுபானக்கடை நீண்ட நாட்களாக இயங்கி வருகிறது.
இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதையும், சாலைகளில் காலி மதுபான பாட்டில்கள் வீசப்படுவதையும் கருத்தில் கொண்டு, மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அரசுப் பள்ளி அருகே செயல்படும் மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளதுடன், குறிப்பிட்ட காலத்தில் இடமாற்றம் செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியர், அந்தக் கடையை மூடி சீல் வைக்கவும் ஆணையிட்டுள்ளது.