திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பக்தர்கள் வசதிக்காக 9 மாதங்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனிக்கு வரும் பக்தர்கள், மலைக்குச் செல்ல ஏதுவாக படிப்பாதை, வின்ச் பாதை ஆகியவற்றிற்கு மாற்றாக ரோப்கார் சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் ஊரடங்கு தளர்வுகளால் வின்ச் சேவை தொடங்கப்பட்ட நிலையில், ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, ரோப்கார் சேவை இன்று முதல் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோயில் இணை ஆணையர் கிராந்தி குமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் ரோப்கார் சேவையை இன்று தொடங்கி வைத்தனர்.
ரோப்காரில் பயணம் செய்ய விரும்பும் பக்தர்கள், சாமி தரிசனத்திற்கு இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.