இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது வழங்கி ஐ.சி.சி. கவுரவித்துள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த வீராக தேர்வு செய்யப்பட்டு, சர் கார்பீல்டு சோபர்ஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஐ.சி.சி. விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் நடைபெற்ற அந்நாட்டு அணியுடனான டெஸ்ட் போட்டியில், அப்போதைய கேப்டனாக இருந்த தோனியின் சிறப்பான செயல்பாடுகளே, ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது வழங்க காரணமாக அமைந்துள்ளது.
இதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு, சர் கார்பீல்டு சோபர்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் இதுவரை 12 ஆயிரத்து 40 ரன்களை எடுத்துள்ள கோலி, டெஸ்ட்டில் 7 ஆயிரத்து 318 ரன்களும், சர்வதேச டி20 போட்டியில் 2 ஆயிரத்து 928 ரன்களும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.