கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளுக்கான ஒத்திகை நடவடிக்கை 4 மாநிலங்களில் இன்று தொடங்குகிறது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்டிராஜெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்துள்ளன. இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என கூறப்படும் நிலையில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகளுக்கான நடைமுறைகளை சோதனை ஓட்ட அடிப்படையில் செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஆந்திரா, குஜராத், பஞ்சாப், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் சோதனை ஓட்ட பயிற்சி நடைபெறுகிறது. தடுப்பூசி வழங்கும் பணிகளுக்காக கோவின் என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை தவிர மற்ற அனைத்து பணிகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து, அதை முன்கூட்டி களையவே இந்த ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.