சாப்பிட்ட பானி பூரிக்கு பணம் கேட்டதால் கடைக்காரரின் கழுத்தை இளைஞர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் விரேந்தர் பால் . இவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் விரேந்தர் பால் மாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் பானிபூரியை சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றுள்ளனர். சாப்பிட்ட பானிபூரிக்கு விரேந்தர் பால் பணம் கேட்டுள்ளார். பணம் கேட்டதால் குடிபோதையில் இருந்த மூவரும் ஆத்திரமடைந்து அவரை மிரட்டியதுடன் கையில் வைத்திருந்த கத்தியால் விரேந்தர் பாலின் கழுத்தை வெட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விரேந்தர் பாலை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் மற்றும் தியாகராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூன்றாவது குற்றவாளியான சோமன் என்பவர் தலைமறைவானதால் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.