மூதாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசன்குளம் பகுதியில் வசித்து வந்தவர் கமலம். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கமலம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கமலத்தின் பேத்தியின் கணவன் ராஜா என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த ராஜா தலைமறைவாகி இருந்தார். எனவே அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ராஜா கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கேரளா சென்று ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை தக்கலை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கமலத்தின் பேத்தியான மாரியம்மாளை ராஜா காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதியருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது பேத்தியுடன் அடிக்கடி தகராறு செய்ததால் ராஜாவை கடுமையாகத் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா மரியம்மாளின் பாட்டி கமலத்தை தாக்கியுள்ளார். எனவே ராஜா மீது கமலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து காவல் துறையினர் இருவரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர் . எனினும் ஆத்திரம் தீராததால் சம்பவத்தன்று கமலத்தை ராஜா கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்று தலைமறைவாகியுள்ளார். பின்னர் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததாக ராஜா கூறியுள்ளார். இதனையடுத்து ராஜா அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.