சுரண்டையில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி செய்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் கண்ணன்- சீதாலட்சுமி.கண்ணன் கூலித்தொழில் செய்து வந்தார். இத்தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது . மேலும் அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுரண்டையில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு கண்ணன் அவருடைய மனைவி சீதாலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். திருமண விழாவில் சீதலட்சுமியின் உறவினர்களிடம் தன் மனைவி அடிக்கடி தகராறு செய்வதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் அவளை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
வீடு திரும்பிய சீதாலட்சுமி திருமண வீட்டில் என்னை பற்றி நீங்கள் ஏன் நீங்கள் எனது உறவினர்களிடம் குறை கூறுகிறீர்கள் என்று கணவரிடம் தகராறு செய்துள்ளார்.மேலும் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விடுவேன் என்றும் கண்ணனிடம் கூறியுள்ளார். இதனால் கண்ணன் எனக்கும் விஷத்தை கொடுத்து விடு குடும்பத்தோடு விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று மாலையில் காபியில் விஷத்தை கலந்து கணவன் மனைவி உட்பட இரண்டு குழந்தைகளும் விஷத்தை குடித்துள்ளனர். தீடிரென்று அவரது வீட்டிலிருந்த அலறல் சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
குடும்பத்தினர் நான்கு பேரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.இதனால் அதிரிச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சீதாலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் . இங்கு குழந்தைகளின் உடல்நிலையில் நல்ல முன்னற்றம் தெரிந்துள்ளது ஆனால் சீதாலட்சுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.