கொரோனா ஊரடங்கு விடுமுறையில் சிற்பக்கலையை கற்றுக்கொண்டு தந்தைக்கு உதவும் சிறுமியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் அருகே உள்ள தெருவில் முத்துக்குமார் என்ற தச்சு தொழிலாளி வசித்து வருகிறார். முத்துக்குமாருக்கு அஞ்சனா ஸ்ரீ என்ற 12 வயது மகள் உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் தனது படிப்பு மற்றும் கல்வித்தகுதியை மறந்து கிடைக்கும் தொழிலை செய்து வருகின்றனர். ஆனாலும் தனது பரம்பரை தொழிலை கைவிட மனமில்லாத முத்துக்குமார் தனது மகளுக்கும் சிற்பக் கலையை கற்றுக் கொடுக்க எண்ணினார்.
இதனை தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் உளியை கையிலெடுத்த அஞ்சனா தற்போது ஊரடங்கு விடுமுறையை முழுவதுமாக பயன்படுத்தி தச்சுத் தொழிலை கற்று கைதேர்ந்த கலைஞராகிக அசத்திக் கொண்டிருக்கிறார். மேலும் சிறு வயது சிறுமியான அஞ்சனா யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகவே கதவுகளில் இடம்பெற வேண்டிய டிசைன்களை சொந்த கற்பனையில் வரைகிறார். இக்கலையை பற்றி அஞ்சனா கூறும்போது தச்சுத் தொழிலில் 70 முதல் 80 வகையான உளிகள் உள்ளன எனவும் எந்த மரத்திற்கு எந்த வகையான உளியை பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் எனக் கூறினார்.
அதற்குப் பின்னர் கதவில் வரையப்பட்டுள்ள வரை படத்திற்கு ஏற்றவாறு செதுக்க வேண்டும் எனவும் கூறினார். இதனைப் போலவே பரதநாட்டியம், சிலம்பம் போன்ற பலவகையான கலைகளையும் அஞ்சனா கற்று வருகிறார். இவை அனைத்திற்கும் தன் தந்தையை காரணமென்றும் குருவாகிய தந்தையை பின் தொடர்கிறேன் என்றும் கூறியுள்ளார். இச்சிறுவயதில் தந்தைக்கு உதவியாக இருந்தது மட்டுமல்லாமல் பாரம்பரிய தொழிலில் அஞ்சனா காட்டும் ஆர்வம் மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக அமைந்துள்ளது.