புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றவாளிக்கு இரட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் என்ற பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் பூக்கடையில் பணிபுரியும் ராஜா என்பவரை கைது செய்தனர். கோயிலில் பொங்கல் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று சிறுமியை கொலை செய்த சம்பவம் தெரிய வந்தது.
பின்னர் வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு மரண தண்டனை, பாலியல் வன்கொடுமைக்கு ஒரு மரண தண்டனை என இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாட்சியங்களை அளித்ததற்காக கூடுதலாக 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.