வீச்சரிவாளுடன் வாகன கொள்ளையர்கள் சுற்றி திரிந்த காட்சிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவலர்களை பார்த்த அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் அந்த வாகனத்தை கைப்பற்றி சோதனையிட்டுள்ளனர் . சோதனையில் அது காயாரம்பேடு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான வாகனம் என்று தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரவு நேரத்தில் முகமூடி மற்றும் தலைக்கவசம்அணிந்த இரண்டு பேர் கையில் அரிவாளுடன் ஒரு வீட்டில் இருந்து விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் கூடுவாஞ்சேரி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை புறநகர் பகுதியில் திருடர்கள் வீச்சரிவாளுடன் வலம் வர ஆரம்பித்திருப்பது மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .