கட்டுமான பணியாளர்கள் நல வாரியத்தை சேர்ந்த 12.69 லட்சம் குடும்பங்களுக்கு ஆவின் நெய் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பால்வளத்துறை அமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகள் தமிழ் நுகர்வோர் வாணிப கழகத்தின் கொள்முதல் ஆணையின் அடிப்படையில் வழங்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி 8 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி அளவு ஒன்றியங்கள் மூலம் 100 மில்லி லிட்டர் அளவுள்ள நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நுகர்வோர் களுக்கும் அனுப்பப்பட உள்ளது. இதற்காக 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 பாட்டில்கள் தயாரிக்கும் பணியை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும். மேலும் நெய் பாட்டில்கள் விற்பனைக்கு அல்ல என்ற வாசகமும் அச்சடிக்கப்பட்டு 100 சதவீத தரத்துடன் விநியோகம் செய்வதுடன், சேதம் இருப்பின் ஆவின் நிறுவனத்தின் அந்தந்த மண்டல அலுவலர்களின் அனுமதியுடன் மாற்றி தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.