பால் வியாபாரியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பிச்சைமணி – பிருந்தா.பிச்சைமணி பால் வியாபாரம் செய்து வந்தார். இத்தம்பதியருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தினமும் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று மாடுகளில் பால் கறந்து அதனை கடைகளுக்கு கொண்டு சென்று பிச்சைமணி விற்று வந்தார். இன்று காலையும் அவர் வழக்கம்போல் பால் கறப்பதற்காக வீட்டிலிருந்து மூன்று மணிக்கு பக்கத்து கிராமத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டுடிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பிச்சைமணியை வழிமறித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிச்சைமணி சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் அவருக்கு கழுத்து மற்றும் முதுகு பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.இதனால் பிச்சைமணி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சைமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பால் வியாபாரி கொலை குறித்து தகவல் கிடைத்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகள் யார் ?கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.