தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்பேன் என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் நலம் விரும்புபவர்களில் நானும் ஒருவன், நண்பர் என்பதால் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு கேட்பேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்மீகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது. அதே சமயம் என்னை யாரும் ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்பந்திக்க முடியாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை, அனைவருக்கும் சொந்தமானது என்று அவர் கூறியுள்ளார்.