கூட்டுறவு வங்கி கிளையில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் கிளை அமைந்துள்ளது. இங்கு டிசம்பர் 27ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் வங்கியின் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சத்தம் கேட்டு வந்த காவலாளியை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மாவட்ட பொது மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
முதல் விசாரணையில் வங்கியின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் கைரேகைகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இரண்டு நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சாளரப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணனிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.