மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆசிட் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். ஆறுமுகம் பெயிண்டராக பணிபுரிகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்ட போது மிகுந்த மனவேதனை அடைந்த ஆறுமுகம் தனது வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்துவிட்டார்.
அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆறுமுகம் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.