காவலர் ஒருவர் தனது காதலுக்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிசங்கர்(22). இவர் சம்பவத்தன்று தனது குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்துள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல்சிகிச்சைக்காக பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறை வழக்கு விசாரணை நடத்தியதில், மணிசங்கர் வசித்துவரும் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் ஒருவர் வசித்து வருகிறார். அவருடைய 15 வயது மகள் பள்ளியில் படித்து வருகிறார். சிறுமியின் அழகில் மயங்கிய மணிசங்கர் தினமும் பின்தொடர்ந்து காதல் வலை வீசியுள்ளார். ஆனால் அந்த சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சிறுமி தன்னுடைய தாயிடம் இது குறித்து கூறியுள்ளார். உடனே சிறுமியின் தாய் மணிசங்கரை அழைத்து கண்டித்துள்ளார்.
இருப்பினும் சிறுமி வீட்டில் இருந்து எப்போது வெளியே வந்தாலும் தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் மணிசங்கரிடம், எனது பெண்ணுக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. கல்யாண வயது இன்னும் வரவில்லை. இருந்தாலும் உனக்கு எனது மகளை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன். தேவையில்லாமல் என் மகள் பின்னல் சுற்றாதே என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிசங்கர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.