வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து திருப்பூரில் உள்ள அவரது உறவுக்காரர் சக்திவேல் என்பவருடன் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பல்லடம் சாலையில் உள்ள தெற்கு பாளையம் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் முருகன் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் முருகனின் உறவுக்காரரான சக்திவேலை விசாரித்தபோது அவர் முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த முருகன் சக்திவேலிடம் அவரது உறவுக்காரப் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு சக்திவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வேன் என்று முருகன் சக்திவேலிடம் சவால் விட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேலும் அவரது நண்பர் கிருஷ்ணகுமாரும் சேர்ந்து மது போதையில் இருந்த முருகனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததால் கத்தியால் கழுத்தை அறுத்து உடலை முட்புதரில் வீசிவிட்டு இருவரும் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து சக்திவேல் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.