சென்னையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் பைக் ஓட்டினால் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளைதமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக காவல்துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகள், சாலைகள், பார்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் இன்று இரவு 10 மணியுடன் மூடப்படும். பைக் ரேஸ் தடுக்கும் விதமாக முக்கிய மேம்பாலங்கள் மூடப்படும். தடையை மீறினால் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.