இந்திய சாதனை புத்தகத்தில் 10 வயது சிறுமி இடம் பெற்ற நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரைச் சேர்ந்த தம்பதியினர் பாலகிருஷ்ணன் -நதியா. இத்தம்பதியருக்கு 10 வயதில் தயாநிதிதா என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். தயாநிதிதா ஒரு நிமிடத்தில் 48 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அதை கட்டியவர்களின் பெயர்களைக் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனை நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இந்தியன் ரெக்கார்டு புக் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தயாநிதிதா கலந்து கொண்டு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ரெக்கார்டு புக் நிறுவனம் தரப்பில் ஒரு நிமிடத்தில் 30 வரலாற்று நினைவு சின்னங்களின் பெயர் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களை கட்டியவர்களின் பெயர்களை கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவி தயாநிதிதா ஒரு நிமிடத்தில் இந்தியாவிலுள்ள 48 வரலாற்று சின்னங்களின் பெயர்கள் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதுவரை யாரும் இந்த சாதனையை செய்தது இல்லை. இதையடுத்து சாதனை படைத்த மாணவிக்கு இந்திய சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் அதற்கான புத்தகம் மற்றும் சான்றிதழை வழங்கி சிறப்பித்துள்ளார்.