அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பேட்டியில் சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அவருடன் அதிமுக ஒருபோதும் இணையாது என்று கூறியுள்ளார்.
சென்னை மந்தவெளியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது, ரஜினி அரசியல் கட்சி தொடங்காதது அதிமுகவிற்கு சாதகமா? பாதகமா? என்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ரஜினி உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவர் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியிருக்கிறார். அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவருக்கு ஆண்டவன் எச்சரிக்கை செய்துள்ளார். ரஜினிகாந்த் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
அதன்பின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் அமைச்சர்கள் படம் இருப்பதாக ஒரு விமர்சனம் வெளிவந்துள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், திமுக தான் பொங்கல் பரிசு தொகுப்பில் கட்சியின் சின்னத்தை போட்டுக் கொடுக்கும். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. நாங்கள் கொடுக்கும் டோக்கன்களில் இரட்டை இலை சின்னம் இல்லை.
மலிவான அரசியல் செய்வதற்கு அதிமுக விரும்பவில்லை. அமைச்சர் பெயர் போடுவதில் தவறில்லை. அரசில் அங்கம் தான் அமைச்சர். முதல்வரும், சட்டப்பேரவை உறுப்பினரும் அரசின் பிரதிநிதி தான். சின்னங்கள் போடுவதே விதிமீறல். பொங்கல் பரிசு திட்டம் மக்களிடம் சென்றடைந்தால் பலபேருக்கு வயிற்றெரிச்சலை உண்டு செய்யும். ஆகையால் இதனை நிறுத்த பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர்.
அதனைத் தொடர்ந்து சசிகலா சிறையில் இருந்து வந்தால், அவருடன் அமமுக இணையுமா? அல்லது அதிமுக இணையுமா?என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், அதிமுகவிற்கு என்றைக்கும் ஒரே நிலைதான். சசிகலா சிறையில் இருந்து வந்த பின்பும் அவருடன் அதிமுக ஒருபோதும் இணையாது என்று கூறினார்.