தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியுள்ளது.
அதனால் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நேர நடை முறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர, மற்ற வழித்தடங்களில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.