மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் நேற்று காலை அவரது மாமனார் வீட்டிற்கு அருகிலுள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் நுழைவு பகுதியிலிருந்த பழைய இரும்பு கதவை தொட்ட போது எதிர்பாராதவிதமாக விக்னேஷின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணனின் மனைவி ரோஜா விக்னேஷை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதைப் பார்த்த விக்னேஷின் தாய் ராஜகுமாரி இருவரையும் காப்பாற்றுவதற்கு ஓடி வந்துள்ளார். ஆனால் அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மரக்கட்டையால் அடித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விக்னேஷும் ரோஜாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். விக்னேஷின் தாய் ராஜகுமாரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.