மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவலியாங்குளம் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். விக்னேஷிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் தனது மாமனாரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் நுழைவுவாயிலின் பக்கவாட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய இரும்பு கேட்டை அவர் தொட்டார். அச்சமயம் எதிர்பாராவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் மனைவி ரோஜா என்பவர் விரைந்து சென்று விக்னேஷை காப்பாற்ற முயற்சிக்கும் போது ரோஜாவின் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதனைத்தொடர்ந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் விக்னேஷின் தாயார் ராஜகுமாரி காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்மூன்று பேரையும் மரக்கட்டையால் அடித்து, மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரோஜா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து விக்னேஷின் தாயாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.