தாய் ஒருவர் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய நடிகரின் பெயரையே தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து வந்தார். மேலும் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் அவருக்கு மக்கள் கோவில் கட்டி வழிபாடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்த குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குறைமாதத்தில் பிறந்ததால் எடை குறைந்து இருப்பதாகவும் தனக்கு உதவும்படி ட்விட்டர் மூலம் மீனாட்சி என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை பார்த்த சோனுசூட் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் கவலைப்பட வேண்டாம், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த குழந்தையின் சிகிச்சைக்காக தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்துள்ளார். தற்போது அந்த குழந்தை நல்ல நிலைமையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தாய் நடிகர் சோனுசூட்க்கு தன்னுடைய நன்றியை தெரிவித்ததோடு, தன்னுடைய குழந்தைக்கு சோனு என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.