செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையிலிருந்து வழுக்கி கடலுக்குள் விழுந்ததில் இரு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் பாறைகளில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி இரு வாலிபர்கள் மாயமான நிலையில் இன்று இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17 இளைஞர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உறவினரின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு டிசம்பர் 30-ஆம் தேதி சென்றிருந்தனர். அன்று மாலை 5 மணி அளவில் அவர்கள் குறும்பனை கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களில் மூன்று பேர் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ள பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றனர் .
அப்போது பாறையின் தன்மையை அறியாமல் பாறை மீது ஏறியதில் திடீரென்று சறுக்கி கடலுக்குள் விழுந்து அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டும் கடலிலிருந்து மீட்கப்பட்டார் . பாலாஜி, ஜெபின் ஆகிய இரு இளைஞர்களும் கடலில் மாயமாகினர். இவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினரும் மீனவர்களும் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியை கண்காணித்தனர். இதற்கிடையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் இளைஞர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த பாலாஜி மற்றும் ஜெபினின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.