மரபணு மற்றம் அடைந்த புதிய கொரோனா சீனாவில் வேகமாக பரவும் தகவல் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. அங்குள்ள இறைச்சி சந்தையில் உருவான சார்ஸ் என்னும் வைரஸ் கிருமியின், மரபணுமாற்றமே இந்த கொரோனா வைரஸ் என உலகின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் உள்ள வைரஸ் துறையினர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் இந்த வைரஸில் மேலும் சில மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய வகை வைரஸ் ஆக உருமாறி தற்போது இங்கிலாந்து நாட்டை அச்சுறுத்தி வருகிறது.
இதற்கு முன்பிருந்த கொரோனா வைரஸை விட, இதனுடைய பரவல் வேகம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் புதியவகை கொரோனாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தற்காலிகமாக இங்கிலாந்துடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
ஏற்கனவே பரவிவரும் வைரஸை விட கூடுதலாக 7 புதிய அறிகுறிகள் இந்த வைரஸ் தாக்கும் மனிதர்களிடம் காணப்படுவதாகவும், பரவும் விதம் ஒன்றாக இருப்பினும், பரவக்கூடிய வேகம் இரு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் மரபணு மாற்றம் பெற்ற இந்த புதிய வகை வைரஸ் தற்போது சீனா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது வேகமாக பரவி வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த செய்தி அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.