டெல்லியில் விவசாயிகள் சுற்றுலா சென்றுள்ளதாக பாஜக முன்னாள் அமைச்சர் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 38 வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டெல்லிக்கு விவசாயிகள் சுற்றுலா சென்றுள்ளதாக பாஜக முன்னாள் அமைச்சர் திக்சன் சூட் விமர்சித்துள்ளார். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஹோசியான்பூரில் உள்ள அவர் வீட்டு வாசலில் மாட்டு சாணத்தை விவசாயிகள் கொட்டியுள்ளனர். இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.