தலைமை ஆசிரியரின் வீட்டிலும், தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலும் ஒரே நாளில கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் மனோகரன் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு இரவில் புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவ்வீட்டில் திருடுவதற்காக திட்டமிட்டனர்.
இதனையடுத்து மனோகரன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். இதேபோல் மனோகரனின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தனியார் நிறுவன ஊழியரான சரவணகுமார் என்பவரும் அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மர்மநபர்கள் சரவணகுமார் வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூபாய் 15 ஆயிரத்தை திருடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அதிகாலையில் தனது வீட்டிற்கு வந்து பார்த்த மனோகரன் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தடவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். அதோடு இரு வீடுகளை சேர்ந்த நபர்கள் அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து இரண்டு வீடுகளிலும் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.