மதுரையில் மக்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் வாரிசு ஆட்சி மட்டும் தான் நடக்கிறது என்று கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமான நிலையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது,வரும் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவிருக்கிறது. அதில் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தினார்கள். அவர்களது வழியில் வரும் அதிமுகவிற்கு மக்கள் தங்களது ஓட்டுகளை வழங்க வேண்டும் என்று அனைவரின் மலர்ப்பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கின்றேன். எம்ஜிஆர் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தார். ஜெயலலிதா தன் உயிர் மூச்சு இருக்கும் வரை நாட்டு மக்களுக்காக உழைத்தார்.
ஆனால் கருணாநிதி யாருக்காக வாழ்ந்தார்? அவருடைய வீட்டு மக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்தார். கருணாநிதி ஆட்சியில் ஒரு குடும்பம்தான் வாழ்ந்தது. அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பதவிக்கு வர முடியும். உங்களைப் போல சாதாரண மக்கள் யாரும் திமுகவில் எந்தப் பதவிக்கும் எக்காலத்திலும் வர முடியாது. திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே செயல்படுகிறது.
முதலில் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். அதன் பின் ஸ்டாலின் வந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலினும் வந்துவிட்டார். ஸ்டாலினின் பேரனும் இப்போது ரெடியாகி விட்டார். எனவே வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தல் வருகின்ற 2021 ஆம் ஆண்டு தேர்தல் ஆகும். உழைக்கின்றவர்கள், நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்றவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் என்று கூறினார்.