மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து என்ஜீனியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் தினேஷ்குமார்(26). இவர் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தினேஷ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தினேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு தான் பணியாற்றும் நிறுவனத்தில் மாடியில் வைத்து தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு மாடியில் இருந்து அனைவரும் கீழே இறங்கி வந்தனர் .
அப்போது தினேஷ்குமார் கால் தவறி மாடிப்படியில் இருந்து தவறி கீழே உருண்டு விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர் . அங்கு தினேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.