புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.600 கோடி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பல்வேறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெல் பயிர்களுக்கு மற்றும் நீர்ப் பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக 13, 500 ரூபாய் என்பதை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ரூ.7410 என்பதை 10,000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக 10,000 ரூபாய் என்பதை 25, 000 ரூபாயாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 600 கோடி இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஜனவரி 7 முதல் நேரடியாக நிவாரணம் வரவு வைக்கப்படும். மேலும் நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புக்காக ரூ. 5,264.38 கோடி தேவை என மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.