கிராமம் ஒன்றிலுள்ள கோவிலில் கருப்பு ஆடு வெட்டி கறி சமைத்து ஆண்களுக்கு மட்டுமே உணவு பரிமாறப்படுகின்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா சாமிக்கு வருடந்தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது அசைவ அன்னதான விழா நடைபெறுகிறது. ஆனால் இந்த அன்னதானத்தை ஆண்கள் மட்டுமே சாப்பிட இங்கு அனுமதி வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை கோயிலுக்கு வழங்கி வருகின்றனர். ஆடுகளை பலியிட்டு அசைவ அன்னதானம் நடத்தப்படுகிறது.
மேலும் இந்த கோயிலுக்கு வழங்கப்படும் ஆடுகள் அனைத்துமே கருப்பு நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. இந்த விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே வரிசையில் அமர வைக்கப்பட்டு கறிசோறு பரிமாறப்படுகிறது. அதன் பின்பு கரிகுழம்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கோவிலுக்கு விடப்படும் இந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு விடப்படும் போது ஆடுகளின் காதுகளில் சாமி ஆடு என அடையாளம் வைக்கப்படுகின்றது. இந்த அடையாளத்தைக் கண்ட யாரும் ஆட்டை தொடமாட்டார்கள்.
சுற்றி திரியும் ஆடுகளை திருவிழா நேரத்தில் விருந்துக்கு பிடித்துக் கொண்டு கோயிலில் விட்டு செல்வார்களாம். ஒரு பந்தி முடிந்தவுடன் அந்த இலையை எடுக்காமல் அப்படியே வேறு இடத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு உணவு பரிமாப்படுகிறது. இந்த விழாவில் பெண்கள் யாரும் பங்கேற்க கூடாது என்பது ஐதீகம். எனவே பெண்கள் பங்கேற்க மாட்டார்கள். மேலும் கோவிலில் பூஜை நடைபெறும் போது பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூறுகின்றனர். இந்த விழாவிற்காக 80 ஆடுகள் பலியிட்டு 1000 கிலோ அரிசி சோறு சமைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது.