தும்பலஅள்ளி அணையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரிமங்கலம் அருகே உள்ள சேவன்கொட்டாய் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிலம்பரசன்-கமலா. இத்தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சிலம்பரசன் அங்குள்ள பேக்கிரியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் தும்பலஅள்ளி அணையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார் . அங்கு அவர் மண்ணை எடுத்து விட்டு வருவதாக கூறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் தண்ணீரிலிருந்து வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிலம்பரசனின் நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை தேடியுள்ளனர் . ஆனால் அவர் கிடைக்காததால் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலம்பரசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அணையில் மூழ்கி உயிரிழந்த சிலம்பரசனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.