பயிர்களை பூச்சி தாக்கியதால் மனமுடைந்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் நாராயணசாமி-மகாலட்சுமி. கணவன் மனைவி இருவரும் தங்களுடைய மகள் அபிராமியின் வீட்டில் வசித்து வந்தனர். நாராயணசாமி ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் சில காலம் பணியாற்றி வந்தார். பின்னர் ஓய்வு பெற்று தனது சொந்த ஊரான பிள்ளையார்நத்தத்தில் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். நிலத்தில் மக்காச்சோளம் உளுந்து ஆகியவற்றை அடுத்தடுத்து பயிர் செய்ததால் அவை இரண்டுமே பூச்களின் தாக்குதலால் பாதிப்படைந்தது.
இந்நிலையில் இன்று காலையில் விவசாய நிலத்திற்கு சென்று பயிர்களை பார்த்துவிட்டு வருவதாக நாராயணசாமி தனது குடும்பத்தினரிடன் கூறிவிட்டு சென்றுள்ளார் . பூச்சிகளால் பாதிக்கப்பட்ட தனது வயலை கண்டு மனவேதனை அடைந்த அவர் அருகே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாராயணசாமி இறப்பதற்கு முன்பு அருகில் உள்ள சுவரில் பேத்தியின் மீது வைத்திருந்த அளவு கடந்த பாசத்தால் மித்ரா என்னை மன்னித்துவிடு என்று எழுதிவிட்டு தூக்கு போட்டுள்ளார்.