ஈரோட்டில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரி (53). இவர் விவசாய தொழில் செய்து வந்தார். மாரி தன்னுடைய நிலத்தில் விளைந்த மக்காசோளத்தை அறுவடை செய்து தோட்டத்தில் குவித்து வைத்திருந்தார். பயிர்களை பாதுகாப்பதற்காக மாரி நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் குடிசை அமைத்து படுத்திருந்தார். அப்போது நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை மாரியின் தோட்டத்திற்குள் புகுந்து குடிசையை காலால் எட்டி உதைத்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரி குடிசையிலிருந்து தப்பிக்க முயன்றார்.
ஆனால் அதற்குள் யானை அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி கீழே போட்டு காலால் பலமாக மிதித்து. இதில் அலறித் துடித்த மாரி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மாரியின் சத்தம் கேட்டு பக்கத்து தோட்ட தொழிலாளர்கள் வருவதற்குள் யானை அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் வனத்துறையினரும் காவல்துறையினரும் விரைந்து சென்று மாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வனத்துறையினரும் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.