நான் விரைவில் நல்ல முடிவு எடுப்பேன், அதை ஏற்றுக்கொள்ள ஆதரவாளர்கள் தயாராக இருங்கள் என்று முக.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முக. அழகிரி, “சகோதரர்கள், போட்டிகளை எதிர் பார்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்த கூட்டம். எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டை ஆக மாற்றியது நான்தான். மதுரை நமது கோட்டை. யாராலும் மாற்ற முடியாது. விரைவில் நல்ல முடிவு எடுப்பேன். அது எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதையும் சந்திக்க தயாராக இருங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.