குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் கிழக்கு சாலையில் அனைத்து குப்பைகளும் கொட்டப்படுகின்றன. அதோடு அங்குள்ள திருமண மண்டபத்திலிருந்து வாழை மரங்கள், சாப்பிட்ட இலைகள் என பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் அதே இடத்தில் கொட்டப்படுகின்றன. இந்நிலையில் அள்ளப்படாத குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
அதோடு இப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் தனிப்பட்ட நபர் ஒருவர் சில சமயங்களில் தீவைத்து எரித்து விடுவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் பல மாதங்களாக குவிந்து கிடக்கும் இந்த குப்பைகளால் பொதுமக்களுக்கு இருமல், காய்ச்சல் போன்ற பல வித நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே அப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.