கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குழி அருகில் வண்டிக்காரன் தோட்டப் பகுதியில் சுதர்சன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா எனும் மனைவி இருந்துள்ளார்.சுதர்சன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இவர்களது வீட்டின் அருகாமையில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சத்யாவிற்கும் ரஞ்சித்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சத்யாவின் கணவர் சுதர்சன் தன் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் சத்யா அதனை மதிக்கவில்லை. கணவர் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஞ்சித் தனது சொந்த ஊரான பீகாருக்கு சில நாட்களுக்கு முன் சென்று இருந்தார். அதன்பின் அவர் மீண்டும் சுதர்சன் வீட்டிற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் மறந்து விடுவோம். மீண்டும் நாம் நண்பர்களாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
பின்பு ரஞ்சித் மற்றும் சுதர்சன், சத்யா ஆகிய மூவரும் மது அருந்தினர். அதன்பின் சுதர்சன் இறைச்சி வாங்குவதற்கு வெளியே சென்றுவிட்டார். வீடு திரும்பி வந்தவர் தன் மனைவி சத்யாவும், ரஞ்சித்தும் உல்லாசமாக இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து இருவரையும் கடுமையாக தாக்கினார். இதனால் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் ரஞ்சித் துடித்து மயங்கி விட்டார்.அதன்பின் சுதர்சன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவர் ஓடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு சத்யா ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ரஞ்சித்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்த சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் சுதர்சன் தப்பி ஓடியதால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.