தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 12-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் இரண்டு புயல்கள் உருவாகி பல்வேறு இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 12-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை காற்று தற்போது வலுவாகவே உள்ளது. அதனால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.