தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்ட நிலையில், அதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் அது பற்றிய அறிவிப்பை சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதுமட்டுமன்றி பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்வது என்பது இன்றியமையாதது. எனவே பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஜனவரி 8 வரை பெற்றோரை அழைத்து கருத்து கேட்க வேண்டும். பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு பள்ளியின் வசதிக்கேற்ப கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.