தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சண்முக பிரியன்- சரண்யா. சண்முக பிரியன் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு கிருத்திகா மற்றும் ஹன்சிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முக பிரியன் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்த பிறகு குடும்பத்தினருடன் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து சண்முகப் பிரியன் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். இச்சம்பவம் நடைபெற்ற வீட்டின் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.