இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருக்கு கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படமும் வெற்றி பெற்றது . இந்த இரண்டு வெற்றிக்குப் பின்னர் மூன்றாவதாக தளபதி விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ,நடிகர் விஜய் சேதுபதி ,நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் ‘மாஸ்டர்’ படம் தயாராகியுள்ளது . வருகிற பொங்கல் தினத்தில் இந்தப் படம் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார் . இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவுக்கு லோகேஷ் கனகராஜ் கதை கூறி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது . இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் ,ராம்சரண் அவர்களுக்கு கதை கூறியது உண்மைதான் ஆனால் அந்த படம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை .மேலும் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை முடித்து விட்ட பிறகே ராம்சரண் படம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.