செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நல்ல பாம்பு கடித்து உயிர் பிழைத்து கொண்ட இளைஞர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ண பூமியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முக்குடாதி. அவர் இரு நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு உள்ளே பதுங்கிக் கொண்டிருந்த நல்ல பாம்பு ஒன்று, அவரின் காலை கடித்து விட்டு மீண்டும் வாகனத்திற்குள் சென்று பதுங்கி விட்டது.
அவர் உடனடியாக தனது தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர், இருசக்கர வாகனத்தை பிரித்து பல மணி நேரமாகப் போராடி வாகனத்திற்கு உள்ளே இருந்த அந்த நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர். அதன் பிறகு மீட்கப்பட்ட பாம்பு வனத்துறையில் விடப்பட்டது. இதனையடுத்து செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முப்புடாதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அவரிடம் பேசியபோது, “தற்போது மழைக்காலம் என்பதால் வாகனங்களில் விஷ ஜந்துகள் குடியேற அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துவோர் தங்களின் வாகனத்தை நன்றாக பரிசோதித்து அதன் பிறகு எடுத்து செல்வது நல்லது.
தனது வாகனத்தில் பதுங்கியிருந்த நல்ல பாம்புவின் வால்பகுதி ஜெயின் பிரேக் பகுதியில் சுற்றி இருந்தது. இதனை நான் சரியாக கவனிக்காததால், வண்டியை ஓட்டும்போது அதன் வால் பகுதியில் அடிபட்ட காரணத்தால் அந்த கோபத்தில் தன்னை கொத்திவிட்டது. உடனடியாக எனக்கு மருத்துவ உதவி கிடைத்ததால் நான் உயிர் பிழைத்துக் கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார். எனவே இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்கு முன்பு நன்றாக சோதித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார்.