தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாநில அமைச்சரை ட்ரம்ப் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த குடியரசு கட்சியின் வேட்பாளர் மற்றும் தற்போதைய அதிபரான ட்ரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்து விட்டதாகவும், வாக்குகளை சரியாக எண்ணவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.
இதனையடுத்து ட்ரம்ப் ஜார்ஜியா மாகாணத்தில் குடியரசு கட்சி அமைச்சரிடம் தொலைபேசி மூலம் பேசியபோது ஜோ பைடனின் வெற்றியை முறியடிக்க தனக்கு 11,780 வாக்குகள் வேண்டும். அதனை நீங்கள் தான் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டுமென மிரட்டியதாக கூறப்படுகிறது. அதோடு தனது தரப்பில் கொடுக்கப்பட்ட வாக்குகளை முறையாக எண்ணி தற்போதைய தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிவை மாற்ற வேண்டி மாநில அமைச்சரை ட்ரம்ப் மிரட்டியதாக கூறும் கமலா ஹாரிஸ் இது தோல்வியை ஏற்றுக் கொள்ளாத விரக்தியின் குரல் என்றும், அதிகார விதிமீறல் என்றும் விமர்சனம் செய்துள்ளார். இதனிடையே வருகின்ற 20ஆம் தேதி ஜோ பைடன் அதிபராக பதவியேற்பதற்கான விழாவின் அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றது.