வீட்டுக்குள்ளே ஜில்லென்று நமக்கு இருக்க வேண்டுமென்றால் நாம் இந்த செங்குத்து வேளாண்மையை பயன்படுத்தலாம்.
செங்குத்து வேளாண்மை மூலம் நமக்கு விவசாயத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் நல்ல பயன் கிடைக்கின்றது. கோடைக்காலங்களில் நமது வீடுகளில் வெப்பமான சூழ்நிலை நிலவும். இதனை தடுக்க நாம் அதிக பொருள் செலவில் ஏசி போன்றவற்றை வீடுகளில் பயன்படுத்தி வருவோம். அதற்கு பதிலாக இயற்கையாகவே நமது வீட்டின் பக்கவாட்டு சுவற்றில் இவ்வாறு செங்குத்து வேளாண்மையை பயன்படுத்தினால் நமது சுவர்களில் ஈரப்பதம் இருக்கும். இதனால் கோடை காலங்களிலும் கூட நமது வீடு குளிர்ச்சியாகவே இருக்கும்.
இவ்வாறு செய்தால் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் காய்கறிகள் போன்றவற்றை இதிலிருந்து நாம் இயற்கையாக பயன்படுத்திக்கொள்ளலாம். இது வீட்டுக்கும் நமது நாட்டிற்கும் ஒரு நல்ல வேளாண் அமைப்பு ஆகும். இஸ்ரேலின் சுவர்களில் நெல் மற்றும் கோதுமை, காய்கறி போன்றவற்றை சுவர்களில் வளர்க்கின்றனர். இந்த நுட்பம் செங்குத்து வேளாண்மை என்று அழைக்கப்படுகிறது. செங்குத்து வேளாண்மை, அதாவது சுவர் விவசாய முறை பிரபலமாக உள்ள நாடு இஸ்ரேல். இஸ்ரேல் மற்றும் பல நாடுகளில், சாகுபடி செய்யக்கூடிய நிலங்களின் பற்றாக்குறை உள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்காக இஸ்ரயேல் மக்கள் செங்குத்து வேளாண்மை கையில் எடுத்துள்ளனர்.
இஸ்ரேலில் பல சுவர்களில் செங்குத்து விவசாய தொழில்நுட்பத்துடன் விவசாயம் நடந்து வருகிறது. செங்குத்து விவசாயத்தின் கீழ், தாவரங்கள் தொட்டிகளில் சிறிய அலகுகளில் நடப்படுகின்றன. அதே நேரத்தில் தாவரங்கள் தொட்டிகளில் இருந்து விழாமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றன. இந்த தொட்டிகளில் பாசன வசதியும் செய்யப்படுகிறது. தானியங்களை வளர்ப்பதற்காக அலகுகள் சுவரில் இருந்து சிறிது நேரம் அகற்றப்பட்டு பின்னர் மீண்டும் சுவரில் வைக்கப்படுகின்றன. இஸ்ரேலைத் தவிர, செங்குத்து வேளாண்மை அதாவது சுவர் வளர்ப்பு தொழில்நுட்பம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவிலும் வேகமாக பரவி வருகிறது.