ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடந்து, கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் Jhalawar மாவட்டம் மற்றும் ஜெய்ப்பூரில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 25-ம் தேதி முதல் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழக்கத் தொடங்கின. ஜெய்ப்பூர், ஜோத்பூர், Kota உள்ளிட்ட பல இடங்களில் 200-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. உயிரிழந்த காகங்களில் உடலில் வீரியமிக்க வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பறவைக்காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உயிரிழந்த காகங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்த காகங்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, சுகாதாரத்துறையினர் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைத் தொடர்ந்து, கேரளாவிலும் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த வாரம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகள் உயிரிழந்து கிடந்தன. இதையடுத்து, வாத்துகளின் மாதிரிகளை சோதித்ததில், பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் இதுவரை, 12 ஆயிரம் வாத்துகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பரவலை கட்டுப்படுத்த 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.