ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காமாட்சிபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஷ்குமார் – சுகன்யா. சதீஷ்குமார் கூலித்தொழில் செய்து வருகிறார்.இத்தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் ஜீவா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஜூஸ் என்று நினைத்து தவறுதலாக மண்ணெண்ணையை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜீவாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜீவாவை அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர் .
பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.