நேற்று நள்ளிரவு முதலே சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் பல இடங்களிலும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. சில இடங்களில் தொடர்ச்சியாக நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரித்து அதன் காரணமாக தற்போது கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வானிலை மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சொல்லி உள்ளது. சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுச்சேரி போன்ற இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் இந்த மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல நாளைய தினத்தை பொருத்த வரை விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31ம் தேதியே முடிவடைய வேண்டியது. ஆனால் வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.