தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இன்று திறக்கப்படுகிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புற நகரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனைதொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமானது 23 அடியை தொட்ட நிலையில், இன்று உபரி நீரானது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே ஏரியின் கரையோரம் வாழ்ந்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.