பாசஞ்சர் ரயிலானது எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றமடைந்ததால், பொதுமக்களுக்கு இதில் பயணிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு காரணமாக ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயிலான, திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அதோடு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் அடைந்த இந்த ரயிலில் தற்போதுள்ள நடைமுறையின்படி முன்பதிவு டிக்கெட் எடுத்த பயணிகள் மட்டுமே இதில் பயணிக்க முடியும்.
இதன் காரணமாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மற்றும் ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு பயணிகள் முன்பதிவு டிக்கெட் செய்யாத காரணத்தினால் எக்ஸ்பிரஸில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனையடுத்து ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட இந்த ரயில் மாலை 6.10 மணியளவில் புதுக்கோட்டைக்குப் வந்தது. ஆனால் இந்த ரயிலில் இருந்து புதுக்கோட்டையில் 3 பயணிகள் மட்டுமே இறங்கினார். மேலும் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பயணிக்க எந்த பயணிகளும் ரயிலில் ஏறாத காரணத்தால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தது. இதனையடுத்து டி.1 கோச்சில் மட்டும் பயணிகள் அதிகம் பயணித்ததாக டிக்கெட் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இந்த ரயில் பாசஞ்சர் ரயிலாக இயக்கப்பட்ட போது பயணிகள் கூட்டமானது இதில் அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது எக்ஸ்பிரஸ் ஆக மாற்றம் செய்யப்பட்ட பின் இந்த ரயிலில் பயணிக்கும் பொதுமக்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் ஏற்கனவே உள்ள கட்டணத்தை விட தற்போது கட்டணம் அதிகமாக உள்ளதாலும், டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி மட்டுமே இந்த ரயிலில் உள்ளதால் மக்களுக்கு இந்த ரயிலில் பயணிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை தற்போது தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ரயில்வே நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.